விசில் பெயரில் ஊடகமா? ஏற்பாடு தீவிரம்… தோழர்கள் சுறுசுறுப்பு!

விசில் பெயரில் ஊடகமா? ஏற்பாடு தீவிரம்… தோழர்கள் சுறுசுறுப்பு!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

தமிழக அரசியலில் தேர்தல் களத்தைக் கடந்து ஊடகத் துறையிலும் தடம் பதிக்க ஆளுங்கட்சி சார்பாக திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சிக்கெனத் தனி தொலைக்காட்சிச் சேனல், நாளிதழ் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்தல் வெற்றி சின்னமான ‘விசில்’ பெயரிலேயே தொலைக்காட்சிச் சேனல் தொடங்கப்படலாம் என்றும், கட்சியின் கொள்கைகள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் செய்திகளைத் தாங்கி வரும் நாளிதழுக்கு ‘வீர வாகை’ எனப் பெயரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள அரசியல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிச் சேனல்… தனி நாளிதழ்!
அரசியல் களத்தில் தனக்கெனத் தனி இடத்தை ஆளு கட்சி தலைமை உருவாக்கி வரும்  நிலையில், கட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில் சொந்த ஊடகங்களை உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

தொலைக்காட்சிச் சேனலுக்கான பணிகளில் ஊடக அனுபவம் கொண்டவர்களை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான பொறுப்புகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், கட்சியின் கொள்கைகள், தலைவரின் அறிவிப்புகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள், கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை வெளியிடும் வகையில் நாளிதழ் ஒன்றையும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஊடகக் களத்திலும் விசில் சத்தம் கேட்குமா?

அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகங்களைப் பயன்படுத்துவது புதிதல்ல.

அந்த வகையில், மிஸ்டர் கிளீன் அண்ட் கட்சியினர் தனக்கென ஊடக அமைப்பை உருவாக்கினால், கட்சியின் செய்திகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொலைக்காட்சிச் சேனல் மற்றும் நாளிதழ் தொடங்குவது தொடர்பாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதே அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.

விசில் சின்னம் அரசியல் களத்தில் ஒலித்த நிலையில், அதே பெயரில் ஊடகமும் உருவாகுமா? கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும்? அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.