நடிகர் டைகர் ஷெராப் காரை குறிவைத்து 5 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு! ஓட்டுநர் உட்பட இருவர் காயம்
செய்தி: ம.பா. கெஜராஜ்,
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் சென்ற காரைக் குறிவைத்து மர்ம நபர்கள் 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் நடிகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், கார் ஓட்டுநர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய இருவர் காயமடைந்தனர்..
பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராபின் மகனான டைகர் ஷெராப், மும்பையில் நேற்று மாலை கால்பந்து விளையாட்டில் பங்கேற்றுவிட்டு, ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டுக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது புஷ்பா பூங்கா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர், அவர் பயணித்த காரை நோக்கி சரமாரியாக 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். அருகில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவின் ஓட்டுநரும் குண்டு காயமடைந்தார்.
இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடிகர் டைகர் ஷெராப் காயமின்றி உயிர் தப்பினார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலின் பின்னணி மற்றும் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.

admin
