ரூ.34.50 லட்சத்தில் கட்டிய ஊராட்சி அலுவலகம் திறந்த முதல் நாளே விரிசல்! தண்ணீரும் இல்லை; கழிவறையும் சுத்தமில்லை!

ரூ.34.50 லட்சத்தில் கட்டிய ஊராட்சி அலுவலகம் திறந்த முதல் நாளே விரிசல்! தண்ணீரும் இல்லை; கழிவறையும் சுத்தமில்லை!

செய்தி:ஜி குலசேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட டி.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2025-26ஆம் ஆண்டு நிதியிலிருந்து ஏ.ஜி.ஏ.எம்.டி. திட்டத்தின் கீழ் ரூ.34.50 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நல்லசிவன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு புதிய அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி, ஜோலார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் விஷால் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

திருப்பத்தூரைச் சேர்ந்த சிறுமி யாஷினி சதுரங்கப் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும், விளையாட்டு உபகரணங்கள் தேவைப்பட்டால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், புதிய அலுவலகக் கட்டிடம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அதன் தரம் குறித்துப் புகார்கள் எழுந்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கழிவறை முறையாகச் சுத்தம் செய்யப்படவில்லை என்றும், தண்ணீர் வசதி இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் முகம் சுழித்தபடியே அங்கிருந்து சென்றனர்.

புதிய கட்டிடம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இத்தகைய குறைபாடுகள் காணப்படும் நிலையில், வருங்காலத்தில் இந்த அலுவலகம் எவ்வாறு செயல்படப் போகிறது என்றும், கடமைக்காக மட்டுமே அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டதா என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கட்டிடத்தில் விரிசல்கள், சுத்தம் செய்யப்படாத கழிவறை, தண்ணீர் வசதியின்மை போன்ற குறைபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கட்டுமானப் பணிகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.p

ரூ.34.50 லட்சம் என்பது பொதுமக்களின் வரிப்பணம். அந்த நிதியில் கட்டப்படும் அரசு அலுவலகம் திறப்பு விழாவுக்கு மட்டுமல்லாமல், நீண்டகாலம் பாதுகாப்பாகவும் முறையான அடிப்படை வசதிகளுடனும் செயல்பட வேண்டியது அவசியம்.

எனவே, மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்து, விரிசல்களுக்கான காரணம், கட்டுமானத் தரம், கழிவறை பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதி குறித்து விசாரிக்க வேண்டும்.

குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.