யூடியூப் விபரீதம்! 11 வயது மாணவன் தீயில் கருகினார்; மகனைக் காப்பாற்றிய தந்தை காயம்!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், அக். 10:
யூடியூப் காணொளியைப் பார்த்து வீட்டில் பரிசோதனை செய்த 11 வயது பள்ளி மாணவன் தீப்பற்றி எரிந்து 80 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானார்.
தீப்பற்றிய மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டை சோலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையரசு. இவரது மகன் கவின் (11), அதே பகுதியில் உள்ள யுனிவர்சல் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்
படிப்பில் சிறந்து விளங்கும் கவினுக்கு அறிவியல் சார்ந்த பரிசோதனைகளைச் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது.
இந்நிலையில், பள்ளியில் பெற்றோர் சந்திப்புக் கூட்டம் நடைபெற இருந்ததால் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்த கவின், வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தின்னர் திரவத்தைப் பயன்படுத்தி ஏதாவது பரிசோதனை செய்ய நினைத்துள்ளார்.
இதற்காக யூடியூப் காணொளியைப் பார்த்து முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாகத் தின்னர் அவரது ஆடையில் பட்டுத் தீப்பற்றியது.
மகனைக் காப்பாற்றப் போராடிய தந்தை!

தீப்பற்றி எரிந்ததால் கவின் அலறியுள்ளார். சத்தம் கேட்டு மாடிக்குச் சென்ற பெற்றோர், அவரது உடலில் தீப்பற்றியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகத் தந்தை இளையரசு மகனைக் கட்டியணைத்து, தண்ணீரைப் பயன்படுத்தித் தீயை அணைத்து அவரைக் காப்பாற்ற முயன்றார். இந்த முயற்சியில் இளையரசுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
தீக்காயமடைந்த கவினை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால், மேல்சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மகனைக் காப்பாற்ற முயன்ற இளையரசு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெற்றோர் கவனிக்க வேண்டிய ஆபத்து,
காணொளிகளில் இடம்பெறும் செயல்முறைகளைப் புரிந்துகொள்ளாமல் வீட்டில் முயற்சி செய்வது, குறிப்பாகத் தின்னர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்களைப் பயன்படுத்துவது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகள் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் பார்க்கும் பரிசோதனைகளை வீட்டில் தனியாகச் செய்து பார்க்காமல் இருப்பதைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
ஆபத்தான திரவங்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை குழந்தைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைப்பதும் அவசியம்.
யூடியூப் பார்த்துச் செய்த பரிசோதனை விபரீதமாக மாறி, மாணவனும் தந்தையும் தீக்காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவன் கவின் சிகிச்சை பலர் இன்று இறந்தார்.

admin
