பில்லிங்....பல நூறு கோடிகளில் தொடர் புகார்கள்! ஒன்றின் மீது கூட நடவடிக்கை எடுக்காத திருப்பத்தூர் காவல் அதிகாரிகள்! கூலித் தொழிலாளிகளை ஏமாற்றி கொழுக்கும் ரவுடிகள்!

பில்லிங்....பல நூறு கோடிகளில் தொடர் புகார்கள்! ஒன்றின் மீது கூட நடவடிக்கை எடுக்காத திருப்பத்தூர் காவல் அதிகாரிகள்! கூலித் தொழிலாளிகளை ஏமாற்றி கொழுக்கும் ரவுடிகள்!

லைவ்லுக்

செய்தி: ஜி. குலசேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.5.53 கோடிக்கு போலி ஜிஎஸ்டி வரிப் பாக்கி உருவாக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி சலாமாபாத் பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி, தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுக்கச் சென்றபோது அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது கணக்கில் இருந்த தொகையுடன் சேர்த்து ரூ.5 கோடியே 53 லட்சத்து 57 ஆயிரத்து 725 எதிர்மறை இருப்பாகக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது, லியாகத் அலி பெயரில் சென்னை மின்ட் பகுதியில் உள்ள பரசுராமன் தெரு முகவரியில் எம்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024–2025ஆம் நிதியாண்டில் அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.5 கோடியே 53 லட்சத்து 63 ஆயிரத்து 217 ஜிஎஸ்டி வரி நிலுவையில் இருப்பதாகவும், சென்னை புரசைவாக்கம் வணிகவரித் துறை உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதில் சிஜிஎஸ்டி ரூ.2.02 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.2.02 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.1.47 கோடி என மொத்தம் ரூ.5.53 கோடி வரி நிலுவை குறிப்பிடப்பட்டுள்ளது. வரி செலுத்தப்படாததால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சென்னையில் தனக்கு எந்தவொரு வணிக நிறுவனமும் இல்லை என்றும், தனது ஆவணங்களை மர்ம நபர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி போலி ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளதாகவும் லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

தோல் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வரும் தனக்கு கோடிக்கணக்கில் வரிப் பாக்கி இருப்பதாக நோட்டீஸ் வந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தனது ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அப்பாவி மக்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களைத் தொடங்கி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் மோசடி கும்பல் செயல்படுவது குறித்து  உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் இவரைப் போன்ற பல ஏழை கூலி தொழிலாளிகளின் ஆதார் அட்டைகளை பெற்று சில கும்பல் போலி நிறுவனங்களை துவக்கி அதன் மூலமாக கோடிகளை அரசுக்கு தெரியாமல் ஏமாற்றி வருகின்றனர இது பெரிய கேம் ஆகும்.

இயங்காத நிறுவனங்களை பெயரளவுக்கு கணக்கு காட்டி அதன் பெயரில் ஜிஎஸ்டி வரி மோசடியை செய்து வருகின்றனர் இது குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் அளவுக்கு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது ஆனால் ஒன்றை கூட இதுவரை விசாரிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாக உள்ளது.

அதேபோல் இந்த நூதன மோசடியில் பேர்ணாம்பட்டை சேர்ந்த சில டுபாக்கூர் ரவுடிகளும் சீட்டிங் பார்ட்டிகளும் ஈடுபட்டு வருவதாக தகவல்.

அவர்கள் பேரணாம்பட்டை மையமாகக் கொண்டு இருந்தாலும் கூட பெங்களூரில் தங்கி கொண்டு அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தபடி, பல்வேறு புரோக்கர்கள் மூலம் இதை செய்து வருகிறார்கள்.

மேலும் பேரணாம்பட்டில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தவர்களும், ரூபாய் ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்தி கொண்டிருந்த சிலரும இன்றைக்கு இந்த பில்லிங் எனப்படும் ஜிஎஸ்டி கோல்ட் மாலில் ஈடுபட்டு செல்வந்தர்களாகி வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

பேரணாம்பட்டு காவல் நிலையத்திலேயே தஞ்சம் கிடக்கும் இது போன்ற கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகளை பிடித்து விசாரித்தாலே போதும் பல உண்மைகள் அம்பலமாகும்.