மக்களுடன் இணைந்து சிப்காட்டை எதிர்க்கும் எம்.எல்.ஏ.! ஆட்சியரிடம் மனு!

மக்களுடன் இணைந்து சிப்காட்டை எதிர்க்கும் எம்.எல்.ஏ.! ஆட்சியரிடம் மனு!

லைவ்லுக்
செய்தி: ஜி. குலசேகரன்,
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே நான்கு கிராமங்களின் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, காட்பாடி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. சுதாகர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அவர்களிடம் மனு அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்தித்த அவர், பாதிக்கப்படும் கிராம மக்களின் சார்பில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகிமண்டலம், இளையநல்லூர், தேன்பள்ளி, வெப்பாலை ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் அணுகுசாலை அமைக்கும் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, இப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை மத்திய மின்சாரத் துறையின் பவர் கிரிட் நிறுவனத்திற்காக வழங்கியுள்ளனர்.

மேலும், சென்னை – பெங்களூரு விரைவுச்சாலைத் திட்டத்திற்காகவும் இப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சென்னை – பெங்களூரு புல்லட் ரயில் திட்டத்திற்காகவும் இதே கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்காகத் தொடர்ந்து நிலங்களை இழந்து வரும் மக்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ. தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களுக்குப் பணம் இழப்பீடாக வேண்டாம்; தங்களது விவசாய நிலங்களே வேண்டும் என்பதில் கிராம மக்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தை ரத்து செய்து, பாதிக்கப்படும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

சிப்காட் திட்டத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அரசாணையை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது