திருப்பத்தூரில் பிரபல துணிக்கடையில் விபரீதம் – அலங்கார விளக்கு பொருத்தியபோது தவறி விழுந்த வடமாநிலத் தொழிலாளி; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட பிரபல எஸ்.வி. துணிக்கடையின் முகப்புப் பகுதியில் அலங்கார விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி ஏணியிலிருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த சூராஜின் மகன் இந்தர்தேவ் (45), திருப்பத்தூர் நகரில் உள்ள எஸ்.வி. தனியார் துணிக்கடையின் முகப்பில் அலங்கார விளக்குகளைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஏணி வழுக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சுயநினைவின்றி இருந்துவரும் இந்தர்தேவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பணியின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த விபத்து தொடர்பாக திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

admin
