த வெ க கா வில் 70 எம்எல்ஏக்கள் அதிருப்தியாம்! சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ரகுபதி!

த வெ க கா வில் 70 எம்எல்ஏக்கள் அதிருப்தியாம்! சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ரகுபதி!

முன்னாள் 
செய்தி: ம.பா. கெஜராஜ்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார் தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய அரசுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசு இதுவரை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரகுபதி விமர்சித்தார்.
தற்போது தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதால், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ரகுபதி, “வைகோ மனுசனே இல்லை; அவரைப் பற்றி பேசாதீர்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தி.மு.க. குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்தில் சுமார் 70 எம்.எல்.ஏ.க்கள் வரை அதிருப்தியில் இருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீதான புகார், வைகோ குறித்த கடுமையான விமர்சனம் என ஒரே செய்தியாளர் சந்திப்பில் ரகுபதி தெரிவித்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.