வேலூர் மாவட்ட நூலகங்களில் 984 போலி ஏ.ஐ. புத்தகங்கள் அகற்றம்! ரூ.1.90 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் கண்டுபிடிப்பு!
செய்தி: கு. அசோக்,
கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் நூலகத்தில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் போலிப் புத்தகங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்த அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், சிறப்பு நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள் மற்றும் கிராமப்புற நூலகங்கள் என மொத்தம் 49 நூலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் அகல்விளக்கு பதிப்பகத்தின் 426 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 558 புத்தகங்களும் என மொத்தம் 984 சந்தேகத்திற்குரிய போலிப் புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,90,745 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகங்களில் ஏராளமான எழுத்துப் பிழைகள் இருப்பதோடு, வாக்கியங்கள் மற்றும் வரிகள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் உண்மையில் உள்ளவர்களா என்பதைக் கண்டறிவதிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக நூலகத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கண்டறியப்பட்ட புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படும் நூல்கள் தரமானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் நூல்கள் கொள்முதல் செய்யும்போது உரிய ஆய்வு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
