மாணவியிடம் கத்தி ஸ்ப்ரே காட்டி மர்ம நபர் மிரட்டல்! மாணவிகள் பாதுகாப்பு கேள்விக்குறி!
செய்தி:கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை காகிதகாரத் தெரு பகுதியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நபர் கடத்திச் சென்றார்.
அவர் அந்த மாணவியை பின்தொடர்ந்து கத்தி மற்றும் ஸ்ப்ரேவைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபரைக் கண்டு அச்சமடைந்த மாணவி அங்கிருந்து தப்பி ஓடி, அப்பகுதி பொதுமக்களிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை மீட்ட பொதுமக்கள் வாலாஜாபேட்டை காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியை மிரட்டிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு அவரைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் முறையான கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.
எனவே, பள்ளி வளாகங்கள் மற்றும் மாணவிகள் செல்லும் வழித்தடங்களில் தினமும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

admin
