சோளிங்கர் ஒன்றியத்தில் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு!

சோளிங்கர் ஒன்றியத்தில் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு!

செய்தி: கு. அசோக்,
ராணிப்பேட்டை: சோளிங்கர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சிப் பணிகள், சுயஉதவிக் குழுவினரின் தொழில் நடவடிக்கைகள் மற்றும் நியாய விலைக் கடையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கரிக்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குளம் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர், பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கூடலூர் ஊராட்சியில் சுழல் நிதி மூலம் கடன் உதவி பெற்று மேற்கொள்ளப்படும் நெசவுத் தொழில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தொழில்களின் செயல்பாடுகள் குறித்தும் விவரங்களைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், ஒன்றியப் பொறியாளர் கணேசன், ஒன்றிய மேற்பார்வையாளர் பூங்குழலி, ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார், வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பூபதி, ஊராட்சி மன்றத் தலைவர் சகாதேவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.