பட்டப்பகலில் ஓட ஓட விரட்டிப் படுகொலை! சிவகங்கையில் பயங்கரம்!
லைவ்லுக்
செய்தி: வல்லம் மகேஷ்,
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே பட்டப்பகலில் பலசரக்குக் கடைக்குச் சென்ற விவசாயி ஒருவர், மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவனிப்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரன் (40), இன்று (நவம்பர் 25) காலை இடையமேலூரில் உள்ள பலசரக்குக் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்துத் தாக்கியுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மகேஸ்வரன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ஆனால், அந்தக் கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை மாவட்ட காவல்துறையினர், உயிரிழந்த மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக சிவகங்கை டி.எஸ்.பி. அமல அட்வின் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைச் சேகரித்து ஆய்வு செய்து, கொலையாளிகள் குறித்த அடையாளங்களைக் கண்டறியும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றவர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், இடையமேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான பின்னணி என்ன? இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்கள் எதற்காக மகேஸ்வரனை குறிவைத்தனர்? என்ற கேள்விகளுக்கு காவல்துறையின் விசாரணை முடிவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin
