பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: சோளிங்கரில் சாலை மறியல்!
செய்தி: கு. அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்த மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் சிகிச்சை முறையில் குறைபாடு இருந்ததாகக் குற்றம்சாட்டி, குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட குமரன் தெருவைச் சேர்ந்த தணிகைவேல் (34), தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (21). திருமணமாகி ஓராண்டான நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சித்ராவுக்கு கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய் மற்றும் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இருவரும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு கடந்த இரண்டு நாட்களாக இருவருக்கும் தனித்தனியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே சித்ராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், உறவினர்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இன்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த குழந்தையின் தந்தை தணிகைவேல் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள், குழந்தையின் உடலுடன் சோளிங்கர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள சோளிங்கர்–திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ

வசதிகள் இல்லை என்றும், பிரசவத்தின்போது செவிலியர்களே சிகிச்சை அளித்ததாகவும், இதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும் தணிகைவேல் குற்றம்சாட்டினார்.
மேலும், தனது மனைவியும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறிய அவர், பிரசவத்தின்போது பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோளிங்கர் பொறுப்பு காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புகார் மனு அளித்தால் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து, குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பச்சிளம் குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் என்ன, பிரசவத்தின்போது அளிக்கப்பட்ட சிகிச்சையில் குறைபாடு இருந்ததா என்பது குறித்து சுகாதாரத்துறை உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.

admin
