திருப்பரங்குன்றதூணில் தீபம் ஏற்றப்படவில்லை!போராட்டத்தில் இறங்கிய பக்தர்கள்– போலீசார் குண்டுக்கட்டாக அகற்றியதால் பதற்றம்!

திருப்பரங்குன்றதூணில் தீபம் ஏற்றப்படவில்லை!போராட்டத்தில் இறங்கிய பக்தர்கள்– போலீசார் குண்டுக்கட்டாக அகற்றியதால் பதற்றம்!

லைவ்லுக்
செய்தி: வல்லம் மகேஷ்,
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இன்று கார்த்திகை தீபத் திருநாளன்று அந்தத் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள பாரம்பரிய இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

நீதிமன்ற உத்தரவும் சர்ச்சையும்!

கடந்த நவம்பர் 20-ம் தேதி உச்சநீதிமன்றம், இந்த ஆண்டு மட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கோயில் நிர்வாகம் அங்கீகரிக்கும் குழுவினர் தீபம் ஏற்றுவதற்கு இடைக்கால அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே மதுரை மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

உயர்நீதிமன்றம் தலையிட்டும் தீராத சர்ச்சை!

உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தடை உத்தரவு பக்தர்களின் மத உரிமைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று அறிவுறுத்தியது.

மேலும், தடை உத்தரவின் கீழ் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொந்தளித்த பக்தர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

ஏற்கெனவே 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மக்களின் கேள்வி என்ன?
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்ட பின்னரும் நடைமுறையில் என்ன நடந்தது? நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தடைகள் என்ன?என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தற்போது மத வழிபாட்டு உரிமை, நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துதல், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களிலும் தமிழக அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

கடந்த ஆட்சியின் போது கூட தீபத்திருநாளில் இதே போன்ற ஒரு பரபரப்பு மறுகோணத்தில் நடைபெற்றது என்பதை மறுக்க முடியாது.