குடியிருப்புகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை – கரும்புகை, தூசி, சத்தத்தால் மக்கள் அவதி; நிரந்தரமாக மூடக் கோரிக்கை!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படும் டிஎஸ் பிளாஸ்டிக் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை முஸ்லிம் வட்டம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் தௌசீஃப் என்பவருக்குச் சொந்தமான டிஎஸ் பிளாஸ்டிக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தத் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுத்தம் செய்தல், வெட்டுதல், அரைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் பெரிய இயந்திரங்களால் ஏற்படும் அதிகப்படியான சத்தம், பிளாஸ்டிக் எரிப்பதால் வெளியேறும் கரும்புகை, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அரைக்கும் இயந்திரங்களில் இருந்து வெளியேறும் தூசி ஆகியவை குடியிருப்புப் பகுதிகளைப் பாதிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் குழந்தைகள் படிக்க முடியாமலும், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் ஓய்வெடுக்க முடியாமலும் அவதிப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தோல் வியாதிகள் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், சுற்றுவட்டார விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.
பொதுமக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து டிஎஸ் பிளாஸ்டிக் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

admin
