போலி புத்தக விவகாரத்தில் அகல்விளக்கு பதிப்பாளர் மோகன் கைது செய்யப்பட்டார்! அவரே முதல் குற்றவாளி!

போலி புத்தக விவகாரத்தில் அகல்விளக்கு பதிப்பாளர் மோகன் கைது செய்யப்பட்டார்! அவரே முதல் குற்றவாளி!

செய்தி: ம.பா. கெஜராஜ்

தமிழக அரசுப் பொது நூலகங்களுக்கு போலியான புத்தகங்களை விநியோகித்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள புகாரில், அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

எதற்காக இந்த வழக்கு?

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் பல போலியானவை என்றும், சில புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும், போலியான ஆசிரியர் பெயர்கள், தவறான தகவல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய ISBN விவரங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு நூலகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய புத்தகங்கள், ரூ.7 கோடி மதிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

உயர்நீதிமன்ற உத்தரவு; வங்கிக் கணக்குகள் முடக்கம்!

நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும், அகல்விளக்கு பதிப்பகம், அதன் உரிமையாளர் மோகன் உள்ளிட்ட தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மோகனின் வீடு மற்றும் பதிப்பகத்துடன் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மோகன் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது, புத்தகங்களைத் தேர்வு செய்தவர்கள் யார், அரசுப் பணம் எவ்வாறு செலவிடப்பட்டது, முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் யார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசுப் பணத்தில் வாங்கப்படும் புத்தகங்களின் தரமும் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த விசாரணையின் முடிவில் மேலும் பல முக்கியத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.