குழந்தைகள் கண்முன்னே தாயின் தற்கொலை! வீட்டிற்குள் புகுந்து தாக்கியதாகப் புகார் – நீதி கேட்டு கோட்டாட்சியர் வாகனம் முன்பு கதறிய பெற்றோர்!

குழந்தைகள் கண்முன்னே தாயின் தற்கொலை! வீட்டிற்குள் புகுந்து தாக்கியதாகப் புகார் – நீதி கேட்டு கோட்டாட்சியர் வாகனம் முன்பு கதறிய பெற்றோர்!

செய்தி: ஜி. குலசேகரன்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தனது இரண்டு குழந்தைகள் முன்னிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது பெற்றோர் கோட்டாட்சியரின் வாகனம் முன்பு விழுந்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் இளவம்பாடி பகுதியைச் சேர்ந்த மணி ராஜேஸ்வரியின் மகள் கீதா (27). இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் சிம்மணபுதூர் சின்ன வட்டம் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தையும், நான்கு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

ரவிசங்கர் கோயம்புத்தூரில் வேலை செய்து வருவதால், மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரவிசங்கரின் உறவினரான ராஜூவ்குமார் என்பவருக்கும் கீதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் அது தகாத உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கணவருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக குடும்பத்தில் தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக இருவரையும் அழைத்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என ரவிசங்கர் ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், கீதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆன நிலையில் பெண் உயிரிழந்ததால், வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு அலுவலர் தணிகாசலம் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்த கோட்டாட்சியரின் வாகனத்தை வழிமறித்த கீதாவின் பெற்றோர், தங்களது மகளின் மரணத்திற்குக் காரணமான ராஜூவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி வாகனம் முன்பு விழுந்து கதறி அழுதனர்.

மேலும், கீதாவின் ஐந்து வயது பெண் குழந்தை அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தில், ராஜூவ்குமாரின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து தனது தாயைத் தாக்கியதாகவும், தனது அண்ணனின் செல்போனைப் பிடுங்கிச் சென்றதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் தாயை இழந்து தவிக்கும் நிலையில், இளம்பெண்ணின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.