கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்! குடியாத்தத்தில் உயிரிழந்த பாமக நிர்வாகி குடும்பத்தினருக்கு திலகபாமா ஆறுதல்!
செய்தி: ஜி. குலசேகரன்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி ஞானவேலின் குடும்பத்தினரை, அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கடந்த திங்கட்கிழமை சேங்குன்றம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஞானவேல் உயிரிழந்தார். அவருடன் இருந்த ரகு என்பவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
இச்சம்பவம் வேலூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து உயிரிழந்த ஞானவேலின் இல்லத்திற்குச் சென்ற திலகபாமா, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
கள்ளத்துப்பாக்கிகள் சட்டவிரோதமாகப் புழக்கத்தில் இருப்பதும், அவற்றைப் பயன்படுத்தி மனித உயிர்கள் பறிக்கப்படுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
விவசாயப் பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சிலர் துப்பாக்கிகளை வைத்திருக்கலாம் என்றாலும், சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் அவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றார்.
காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், காவலர்களின் பணிச்சுமை, மனநலம் மற்றும் பணிப் பாதுகாப்பிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பண்டிகைக் காலங்களில் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு என்று அமைச்சர் தெரிவித்ததாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், பண்டிகைகள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கானவை; கொலைகளை இயல்பானதாகக் கூறுவது பொறுப்பற்ற கருத்து எனக் கண்டனம் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் திலகபாமா வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பது நியாயமானதே என்றும், அதற்கு மாநில அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

admin
