வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முறிந்து விழுந்த ராட்சத வேப்பமரம் – இரண்டு கார்கள் சேதம்; மின் கம்பிகள் அறுந்தன
செய்தி: கு. அசோக்
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பெரிய வேப்பமரம் முறிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்தன.
மின் கம்பிகளும் அறுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் ஏராளமான பெரிய மரங்கள் நிறைந்துள்ள நிலையில், அலுவலகத்தின் பின்புறம் இருந்த ராட்சத வேப்பமரம் திடீரென முறிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்தது.
அப்போது கார்களுக்குள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. இருப்பினும் மரம் விழுந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்தன. மேலும் மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன.
தகவலறிந்து அங்கு வந்த பணியாளர்கள் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரம் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

admin
