காரைக்கால் வழியாக செல்லும் பெண்களுக்கு ‘வெற்றிப் பயணம்’... பாதியில் இறங்கினால் கட்டணம்! வழிகாட்டுதலில் சிக்கல் – பயணி, நடத்துநர் இடையே வாக்குவாதம் ஏற்படும் அபாயம்!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
தமிழக அரசின் விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்டம் மூலம் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக எல்லையோரப் பகுதிகளில் இந்தத் திட்டத்தின் நடைமுறை விதிமுறைகள் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பகுதி வழியாக தமிழகத்திற்குள் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் தொடர்பாக இந்தக் குழப்பம் எழுந்துள்ளது.
உதாரணமாக, மயிலாடுதுறையிலிருந்து நாகை நோக்கி செல்லும் அரசுப் பேருந்து காரைக்கால் பகுதி வழியாக செல்கிறது.
தமிழகத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் தமிழகப் பகுதியில் இறங்கும் பெண் பயணிக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்க முடியும்.
ஆனால், அதே பேருந்தில் பயணிக்கும் பெண் காரைக்கால் பகுதியில் இடையில் இறங்கினால், அந்தப் பகுதிக்கான பயணத் தொலைவுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், பயணிகள் மத்தியில் மட்டுமின்றி பேருந்து நடத்துநர்களிடையேயும் நடைமுறை குழப்பம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகப் பகுதியில் ஏறிய பெண் ஒருவர் நாகை செல்வதாகக் கூறி பூஜ்ஜிய கட்டணப் பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு, இடையில் காரைக்கால் பகுதியில் இறங்க முயன்றால், அவரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டுமா? அல்லது அவர் பயணத்தைத் தொடர அனுமதிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.
இதுபோன்ற சூழலில் நடத்துநர் கட்டணம் கேட்டால் பயணிக்கும் பெண்ணுக்கும் நடத்துநருக்கும் இடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்துத் துறை வழிகாட்டுதலின்படி, தமிழகப் பகுதியில் பயணிக்கும் தொலைவுக்கு பூஜ்ஜிய கட்டணச்சீட்டும், அண்டை மாநிலம் அல்லது யூனியன் பிரதேசப் பகுதியில் பயணிக்கும் தொலைவுக்கு உரிய கட்டணச்சீட்டும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதது,
அதாவது, ஒரே பயணத்திற்கு இரண்டு விதமான பயணச்சீட்டுகள் வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தமிழகத்தின் எல்லையோரப் பகுதிகளில் இருந்து காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஏராளமான பெண்கள் வேலை, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெண்களின் பயணத்தை எளிமையாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில், எல்லையோரப் பயணிகளுக்கு மட்டும் இத்தகைய கட்டணக் குழப்பம் ஏற்படுவது திட்டத்தின் நோக்கத்தையே பாதிக்கும் நிலையை உருவாக்கக்கூடும்.
எனவே, தமிழகத்தில் ஏறி அருகிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசப் பகுதியில் இறங்கும் பெண்களுக்கும் குறைந்தபட்சம் குறிப்பிட்ட சலுகையை வழங்கும் வகையில் விதிமுறைகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டம், நடைமுறை விதிமுறைகளால் குழப்பமாக மாறாமல் இருப்பதற்கு போக்குவரத்துத் துறை உரிய தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்பதே எல்லையோரப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
