நல்ல தண்ணீர் குளத்தைச் சாக்கடைக் குளமாக மாற்றியவர்கள் மீது சட்டம் பாயுமா? தாழ்த்தப்பட்ட மக்களின் நீர்நிலை உரிமை பறிக்கப்பட்டதா? – சமூக ஆர்வலர் வேலூர் பிலிப் கேள்வி

நல்ல தண்ணீர் குளத்தைச் சாக்கடைக் குளமாக மாற்றியவர்கள் மீது சட்டம் பாயுமா? தாழ்த்தப்பட்ட மக்களின் நீர்நிலை உரிமை பறிக்கப்பட்டதா? – சமூக ஆர்வலர் வேலூர் பிலிப் கேள்வி

செய்தி: ம.பா. கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த நல்ல தண்ணீர் குளத்தில் குடியிருப்புகளின் கழிவுநீர் கலக்கப்பட்டு, நீர்நிலை சாக்கடைக் குளமாக மாறியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக விளங்கிய இந்தக் குளத்தில், புதிதாக உருவான குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் கலக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

இதனால் குளத்தின் நீர் மாசடைந்து, அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி, இரண்டு வாரங்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை காட்பாடி மாவட்ட செயலாளர் வேலூர பிலிப் முன்னெடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக குளத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், குளத்தைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் பணிகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தனர்.

அடுத்த வாரம் மாவட்ட திட்ட இயக்குநர் நேரில் வருகை தந்து ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சமூக செயற்பாட்டாளர் மற்றும் விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், மாவட்ட ஆட்சியரிடம்  புகார் மனு அளித்துள்ளார். 

அதில்,குளத்தில் கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுத்து, மாசடைந்த நீர்நிலையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தாழ்த்தப்பட்ட மக்கள் வழக்கமாகப் பயன்படுத்தி வந்த நீர்நிலை திட்டமிட்டு மாசுபடுத்தப்பட்டதா, அவர்களின் நீர்நிலைப் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கம் இருந்ததா, அரசு அலுவலர்கள் தங்களது கடமைகளை வேண்டுமென்றே புறக்கணித்தார்களா என்பதையும் விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

விசாரணையில் சாதி அடிப்படையிலான உரிமை மறுப்பு மற்றும் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டால், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அலுவலர்களின் கடமை தவறுதல் உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நல்ல தண்ணீர் குளத்தைச் சாக்கடைக் குளமாக மாற்றியவர்கள் யார்? பொதுமக்களின் நீர்நிலை உரிமையைப் பறித்தவர்கள் மீது சட்டம் பாயுமா? நீர்நிலையைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் பொறுப்பு என்ன? என்ற கேள்விகளை  வேலூர் பிலிப் எழுப்பியுள்ளார்.

இந்த ஆய்வின்போது மாவட்டச் செயலாளர் வேலூர் பிலிப், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் அஜித் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜசேகர், ஒன்றியச் செயலாளர் டேவிட் (எ) தனராஜ், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டத் துணைச் செயலாளர் நவீன், சுனில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நீர்நிலைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல; அது பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையும்கூட.

பிரம்மபுரம் நல்ல தண்ணீர் குளம் மீண்டும் அதன் பழைய நிலைக்குத் திரும்புமா? மாசுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.