வேலூர் சாரதி மாளிகை மேம்பாலம் முதல் சத்துவாச்சாரி சுரங்கப்பாதை வரை… எங்கும் ஆக்கிரமிப்பு, குப்பை, மனிதக் கழிவுகள்! நடந்து செல்ல முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்… வேலூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

வேலூர் சாரதி மாளிகை மேம்பாலம் முதல் சத்துவாச்சாரி சுரங்கப்பாதை வரை… எங்கும் ஆக்கிரமிப்பு, குப்பை, மனிதக் கழிவுகள்! நடந்து செல்ல முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்… வேலூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

செய்தி: கண்ணியம்பாடி தாஸ்,
வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டைக்கு எதிரே அமைந்துள்ள சாரதி மாளிகை மேம்பாலம், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மேற்கிலிருந்து கிழக்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் சென்று வரும் முக்கிய நடைபாதையாக விளங்குகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மொய்தீன் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம், தற்போது முறையான பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

குறிப்பாக, பாலத்தின் படிக்கட்டுகள் சேதமடைந்தும் பராமரிப்பின்றியும் இருப்பதால் பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாலத்தின் இருபுறங்களிலும் வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

வடக்கு, தெற்கு பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால் நடைபாதை மேலும் சுருங்கியுள்ளது.

பாலத்தின் கீழ்ப்பகுதியிலும் கடைகள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் தடையின்றி நடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதேபோல், வேலூர் சத்துவாச்சாரி சுரங்கப்பாதையிலும் குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகள் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டிய மேம்பாலமும் சுரங்கப்பாதையும் இவ்வாறு பராமரிப்பின்றிக் கிடப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் போக்குவரத்துக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, சாரதி மாளிகை மேம்பாலத்தின் படிக்கட்டுகளைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விளம்பரப் பதாகைகளை முறைப்படுத்தவும், சத்துவாச்சாரிசுரங்கப்பாதையைத் தூய்மைப்படுத்தவும் வேலூர் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்பு: இந்த லட்சணத்தில் வேலூரில் மையப்பகுதியில் உள்ள கிரீன் சர்க்கிள் பகுதியில் பாதாள நடைபாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிரீன் சர்க்கிலில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்பது அதிமேதாவி அதிகாரிகளின் சிந்தனையாம். 

அந்த கிரீன் சர்க்கரையை சுற்றியுள்ள ஹோட்டல் நிறுவனத்தினர் கார்களை அங்கு பார்க்கிங் செய்யாமல் இருந்தாலே போதும் போக்குவரத்து அங்கு கட்டுப்படும்.