ரூ.13.55 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம்! திறக்கப்பட்டும் பேருந்துகள் வராததால் வெறிச்சோடிய அவலம்!

ரூ.13.55 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம்! திறக்கப்பட்டும் பேருந்துகள் வராததால் வெறிச்சோடிய அவலம்!

லைவ்லுக்
செய்தி: கு. அசோக்
ரூ.13.55 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா முடிந்து பல நாட்களாகியும் முழுமையான பயன்பாட்டிற்கு வராமல் வெறிச்சோடிக் காணப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை நகராட்சிப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்.

ஆனால், திறப்பு விழா நடைபெற்றும் பேருந்து நிலையம் இதுவரை முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை.

பேருந்துகள் வந்து செல்லாததால் பயணிகள் நடமாட்டமின்றி பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் பொதுமக்களின் வசதிக்காகக் கட்டப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால், இத்திட்டத்திற்காகச் செலவிடப்பட்ட நிதி வீணாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் பழைய பேருந்து நிலையத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, போக்குவரத்துத்துறை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல உரிய ஏற்பாடுகளைச் செய்து, அதனை முழுமையான மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே ராணிப்பேட்டை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.