அரசுப் பள்ளி ஆசிரியர் மத அமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் பதவி வகிப்பதாகப் புகார்! விசாரணை நடத்த ஆட்சியரிடம் மனு!

அரசுப் பள்ளி ஆசிரியர் மத அமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் பதவி வகிப்பதாகப் புகார்! விசாரணை நடத்த ஆட்சியரிடம் மனு!

லைவ்லுக்
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் ஒருவர், கல்வித்துறையின் முன் அனுமதி பெறாமல் மத அமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் பதவி வகித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் எல்.எஸ். தேவகுமார் அளித்துள்ள மனுவில், மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் எஸ். கார்த்தின் சத்தீஷ் பிரேம்குமார் என்பவர், ஆம்பூர் இம்மானுவேல் லுத்தரன் கிறிஸ்தவ ஆலயத்தின் கீழ் செயல்படும் இந்தியன் எவாஞ்சலிக்கல் லுத்தரன் சர்ச் அமைப்பின் 2026–2028ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தேர்தலில் போட்டியிட்டு செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளுக்கு முரணாக இத்தகைய நிர்வாகப் பொறுப்பை வகிக்க அனுமதி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், கல்வித்துறையின் முன் அனுமதி பெறாமல் மத அமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் செயல்படுவது விதிமீறலாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட மனு மீது 80 நாட்களுக்கும் மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளைப் பின்பற்றுகிறாரா என்பதை சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் முறையாக விசாரித்து, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக உள்ளது.