ஆட்சியர் பங்கேற்கவில்லை! இரண்டு மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மூன்று மாவட்ட எக்ஸ் ராணுவ வீரர்கள்!

ஆட்சியர் பங்கேற்கவில்லை! இரண்டு மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மூன்று மாவட்ட எக்ஸ் ராணுவ வீரர்கள்!

லைவ்லுக்
செய்தி: கு. அசோக்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காததால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மூன்று மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர். மாலை 3 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் நேரில் பங்கேற்று தங்களது குறைகளைக் கேட்டறிந்து தீர்வு வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் முன்னாள் ராணுவ வீரர்கள் காத்திருந்தனர்.

ஆனால், மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு வராத நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் முன்னாள் ராணுவ வீரர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தும் ஆட்சியரைச் சந்திக்க முடியாததால், பலரும் ஏமாற்றத்துடன் மனுக்களை அளித்துவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்களது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தை அர்ப்பணித்த முன்னாள் ராணுவ வீரர்களின் குறைகளைக் கேட்க மாவட்ட ஆட்சியர் நேரில் வராதது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அடுத்த முறை நடைபெறும் குறைதீர்வுக் கூட்டத்திலும் இதே நிலை தொடருமா என்ற ஆதங்கத்துடன் சில முன்னாள் ராணுவ வீரர்கள் அங்கிருந்து சென்றனர்.

முன்னாள் ராணுவ வீரர்களின் குறைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, இதுபோன்ற கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் பங்கேற்று அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.