ஆட்சியர் புகாரில் தவெக எம்எல்ஏ மீது வழக்கு! விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங் நியமனம்! ஐஜி காமினி கண்காணிப்பார் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது இல்லத்திற்குச் சென்று தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் மேற்கொள்வார் என்றும், காவல்துறையின் நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி விசாரணையைக் கண்காணிப்பார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆட்சியர் அளித்த புகாரால் திருப்பம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்று தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் திரிசூலி, எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றத்தில் எழுந்த கேள்விகள்!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில், ஆட்சியர் தரப்பிலிருந்து முறையான புகார் வரவில்லை என அரசு தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்சியரிடம் நேரடியாகப் பேசி விவரங்களைப் பெறுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரிப்பார்! ஐஜி காமினி கண்காணிப்பு!
இந்த வழக்கின் விசாரணையை யார் மேற்கொள்வார்கள், யார் கண்காணிப்பார்கள் என்ற விவரங்களைத் தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஷ்டி சிங் நியமிக்கப்படுவார் என்றும், ஐஜி காமினி விசாரணையைக் கண்காணிப்பார் என்றும் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியல் சாசன உயர் பதவியில் இருக்கும் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், விசாரணை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
சமூக வலைதளப் பதிவுகளை நீக்க உத்தரவு!
இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளை நீக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தும், அவை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரியே, சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் அளித்து நீதிமன்றத்தின் கவனத்தையும் நாடியிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது விசாரணை அதிகாரியும் கண்காணிப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குற்றச்சாட்டுகள் விசாரணையில் நிரூபிக்கப்பட வேண்டிய நிலையில், நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெறவுள்ள இந்த விசாரணை தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியின் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் ஆலோசனை செய்துள்ளார் அதேபோல் எம் எல் ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு காவல்துறையினர் சென்று இருப்பதாகும் தகவல் அனேகமாக அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

admin
