மேதாது அணைதிட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்!

ம.பா.கெஜராஜ்,
மேதாது அணைதிட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த 18-ந்தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் (19-ந்தேதி) 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில்,பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது.
காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானத்துடன், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்த தீர்மானங்களை தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிகிறார்.
இந்த தீர்மானத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்க கூடாது என வலியுறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலுக்கு தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் ஒப்புதல் பெறப்படும். இதன்பின்னர் இந்த தீர்மானம் ஆனது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.