செய்திக்கென கேள்வி கேட்ட செய்தியாளர்களை விரட்டிய எஸ்.பி.! காவல் நிலையத்தில் நடந்தது என்ன?
லைவ்லுக்
செய்தி: ம.பா. கெஜராஜ்,
கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் ஆவேசமாக நடந்துகொண்டு, அவர்களை காவல் நிலையத்திலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றிய சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்திற்குள் ஏன் வருகிறீர்கள், நீங்கள் உள்ளே வரக்கூடாது, வெளியே செல்லுங்கள் எனக் கூறிய காவல் கண்காணிப்பாளர், செய்தியாளர்களை வெளியேற்றுவதில் கடுமையாக நடந்துகொண்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
செய்தியாளர்களை வெளியேற்றியதோடு மட்டுமின்றி, கையை நீட்டி மிரட்டும் தொனியில் பேசியதாகவும், கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அவர்களை வெளியேற்றியதாகவும் புகார் எழுந்துள்ளது.
செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்தபோதும், அவற்றுக்குப் பதிலளிக்காமல் காவல் கண்காணிப்பாளர் ஆவேசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 15 முதல் 20 நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அந்த வழக்கில், மேலிட உத்தரவு வரும் வரை அமைதியாக இருந்ததாக விமர்சிக்கப்படும் அதிகாரி, உத்தரவு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் இத்தகைய அணுகுமுறையைக் காட்டியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுடன், பொதுமக்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டிய பொறுப்பும் கொண்டவர்கள்.
செய்தியாளர்கள் கேள்வி கேட்பது அவர்களது தொழில்முறை கடமை. அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது அல்லது உரிய விளக்கம் அளிப்பது அதிகாரிகளின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும்.
காவல் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் விசாரணை நடைமுறைகளுக்கான கட்டுப்பாடுகள் அவசியமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரத்தில், செய்தி சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்களிடம் அவமரியாதையாகவும் மிரட்டும் தொனியிலும் நடந்துகொள்வது ஏற்கத்தக்கதல்ல.
செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குவது ஏன்? காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினால் அவர்களை வெளியேற்றுவதுதான் பதிலா?
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதம் தொடர்பாக விசாரித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
