பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 30-க்கும் மேற்பட்ட கோயில் காளைகள் கசாப்பு கடைக்கு விற்பனை? முன்னாள் அறங்காவலர் தலைவர் மீது வழக்கு!

பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 30-க்கும் மேற்பட்ட கோயில் காளைகள் கசாப்பு கடைக்கு விற்பனை? முன்னாள் அறங்காவலர் தலைவர் மீது வழக்கு!

செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர்: நந்திபெண்டா நந்திகேசவராய பெருமாள் கோயிலுக்குப் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 30-க்கும் மேற்பட்ட காளைகளை, இந்து சமய அறநிலையத்துறையின் விதிமுறைகளை மீறி ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். 

இவ்வாறுஎழுந்த புகாரில், கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகம் மீது நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வெலகல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட நந்திபெண்டா பகுதியில் நந்திகேசவராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஐந்து வாரங்கள் சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாக்களில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, பச்சூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

பெருமாளை வழிபடும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை கோயிலுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த நான்கு வாரங்களாகப் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்கு வழங்கிய காளைகள் காணாமல் போனதாகக் கிராம மக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட சிலர் ரூ.2.50 லட்சம் பெற்றுக்கொண்டு, துறையின் விதிமுறைகளுக்கு மாறாக 30-க்கும் மேற்பட்ட கோயில் காளைகளை விற்பனை செய்ததாகத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், கோயில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கோயிலுக்குச் சொந்தமான மரங்களையும் வெட்டி விற்பனை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, கோயிலுக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் கால்நடைகள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, புகார்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுலயும் இந்த காளைகள் கசாப்பு கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது மத உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பிரச்சனை பெரிதாக வாய்ப்பு இருக்கிறது.

காவல்துறை விசாரணையின் முடிவில் கோயில் காளைகள் விற்பனை தொடர்பான முழு விவரங்களும் தெரியவரும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கம் கிடைத்தால் அதுவும் வெளியிடப்படும்.