மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் இல்லை! வேலூர் ரயில்வே விழாவில் அலைக்கழிப்பு; DRO-வையும் கண்டுகொள்ளாத ரயில்வே அதிகாரிகள்!
செய்தி: ஜி. குலசேகரன்,
வேலூர், அக். 11:
வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை ரூ.8.6 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தியதைத் தொடர்ந்து, அதன் திறப்பு விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பல மணி நேரம் காத்திருந்தும் உணவு, குடிநீர் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக விழாவில் கலந்துகொண்ட மாவட்ட வருவாய் அலுவலரையும் ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அவர் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மாணவர்களுக்கு உணவு வழங்காமல் அலைக்கழிப்பு!
வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழா நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஞாயிற்றுக்கிழமையான அன்றும் பள்ளி மாணவர்கள் விழாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆனால், மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்யப்படவில்லை.
விழா நிகழ்ச்சிகள் தாமதமானதால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் எனத் தெரிவித்து அழைத்து வந்த நிலையில், உணவு வழங்கப்படாததால் ஆசிரியர்கள் கடும் கோபமடைந்தனர்.
உணவு வழங்குவதாகக் கூறித்தான் மாணவர்களை அழைத்து வரச் சொன்னீர்கள்; ஆனால், உணவைக்கூட வழங்க மறுக்கிறீர்களே என்று ஆசிரியர்கள் விழா ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாதது விழா நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை அதிகரித்தது.
DRO-வையும் கண்டுகொள்ளாத ரயில்வே அதிகாரிகள்!

இந்த விழாவில் திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் பாலக் ராம் நேகி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக விழாவில் பங்கேற்க வந்த மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷை ரயில்வே துறை அதிகாரிகள் யாரும் உரிய முறையில் வரவேற்கவோ, கவனிக்கவோ இல்லை.
இதனால் அவர் பாஜகவினருடன் அமர்ந்திருந்தார். பின்னரும் ரயில்வே அதிகாரிகள் அவரைக் கண்டுகொள்ளாததால், அதிருப்தியடைந்த அவர் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து எழுந்து புறப்பட்டுச் சென்றார்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்க வந்த உயர் அலுவலருக்கே உரிய கவனம் அளிக்கப்படாத சம்பவம் விழா ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
விழா ஏற்பாடுகளில் பொறுப்பேற்க வேண்டியது யார்?
பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மாணவர்கள் உள்ளிட்டோர் நீண்ட நேரக் காத்திருப்பால் சோர்வடைந்தனர்.
பள்ளி மாணவர்களை அழைத்து வந்த நிலையில், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் உணவையும் உறுதிப்படுத்த வேண்டியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முக்கியப் பொறுப்பாகும்.
மாணவர்களுக்கு உணவு வழங்கப்படாததற்கான காரணம் என்ன? விழா ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்பது யார்?
மாவட்ட வருவாய் அலுவலருக்கு உரிய வரவேற்பும் கவனிப்பும் அளிக்கப்படாதது ஏன்? என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.

admin
