பெரம்பலூரில் பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்துக் கொலை! காட்டுமன்னார்கோவிலில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு!
செய்தி: க.பாலகுரு,
பெரம்பலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி நேர ஓவிய ஆசிரியர் புகழேந்தி (50), பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோழிப்பண்ணையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் பெரிய திருகோணம் பகுதியைச் சேர்ந்த ராமராஜின் மகன் புகழேந்தி, கல்லகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் குன்னம் அருகே பெரியம்மாபாளையம் சாலையில் உள்ள தனது உறவினர் ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான கோழிப்பண்ணைக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், கோழிப்பண்ணையில் புகழேந்தி கழுத்து மற்றும் இடது கையில் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த குன்னம் போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அரியலூரைச் சேர்ந்த மணிகண்டன் (35), குன்னம் பகுதியைச் சேர்ந்த சிவசூரியா (30), அரியலூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஆகிய மூவரும் புகழேந்தியைத் துரத்திச் சென்றதாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில் போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வழக்கறிஞர் தங்க விக்ரமன் மீது மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளரான வழக்கறிஞர் தங்க விக்ரமன், இன்று காலை காட்டுமன்னார்கோவில் செட்டித் தெரு பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைத் தலை மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ரத்தக் காயங்களுடன் சரிந்த அவரைப் பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாகத் தாக்குதல் நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாரும் அதிவிரைவுப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் பெரம்பலூர் அருகே பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டதும், காட்டுமன்னார்கோவிலில் வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்டதும் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

admin
