தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி புகார் எதிரொலி!
செய்தி: ம.பா.கெஜராஜ்,
கள்ளக்குறிச்சி: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரில் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு இன்று (நவ.27) மாலை சென்ற போலீசார், அவரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஷ்டி சிங் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது நடவடிக்கைக்கு முன்பாக அவரது வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அங்கு திரண்டிருந்த தவெகவினரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு!
கடந்த நவம்பர் 23-ம் தேதி பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாலியல் தொந்தரவு, ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புதல், பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஐ.ஜி. காமினி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வந்தது.
புகார் அளித்த பெண் அதிகாரி கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் எண்-2 சுவாதி அழகப்பன் முன்னிலையில் ரகசிய வாக்குமூலமும் அளித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
