தீய சக்திகளால் ஆபத்தா?எம்.எல்.ஏ. வீட்டைச் சுற்றி போலீஸ் குவிப்பு! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!
லைவ்லுக்
செய்தி: ம.பா. கெஜராஜ்,
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் வீட்டின் முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று வரை நான்கு போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த நவம்பர் 25ஆம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, எம்.எல்.ஏ.வின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு நேரில் சம்மன் வழங்கினார். அப்போது அவரிடம் ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை!
இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி மூத்த காவல் அதிகாரிகள் கண்காணிப்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை ஐ.ஜி. காமினி விசாரணையைக் கண்காணித்து வருகிறார்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷாநாஸ் இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பான ஆவணங்களைச் சிறப்பு விசாரணை அதிகாரியிடம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டில் தடுப்புகள் அமைக்கும் பணி!
இதற்கிடையே, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டின் முன்பகுதியில் இரும்புக் குழாய்களைக் கொண்டு தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

வீட்டிற்கு கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் வந்து செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா அல்லது வேறு காரணங்களுக்காகத் தடுப்புகள் அமைக்கப்படுகிறதா என்பது குறித்து எம்.எல்.ஏ. தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
நீதிமன்றத்தில் பெண் அதிகாரி வாக்குமூலம்!
இந்த வழக்கில் புகார் அளித்த பெண் அதிகாரி, இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக நீதிமன்ற வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விசாரணை அதிகாரிகள் இதுவரை சேகரித்துள்ள தகவல்கள் மற்றும் பெண் அதிகாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து, அவை தனது பெயருக்கும் கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான போலிச் செய்திகள் எனத் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!
இந்த வழக்கு நாளை நவம்பர் 27ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட காவல்துறை விசாரணை, சிறப்புக் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் பெண் அதிகாரியின் வாக்குமூலம் தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
எம்.எல்.ஏ. வீட்டைச் சுற்றி அதிகரிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை, நீதிமன்றத்தில் பெண் அதிகாரி அளித்துள்ள வாக்குமூலம் என அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் கள்ளக்குறிச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
போலீசார் குவிக்கப்பட்டிருப்பது கைது நடவடிக்கைக்கான முன்னேற்பாடா அல்லது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களுக்கான நடவடிக்கையா என்பது குறித்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் வீட்டை தீய சக்திகள் தாக்கக்கூடும் என்பதாலேயே தடுப்புகளும் போலீசும் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

admin
