விசாரணை தீவிரமடையும் நேரத்தில் சிபிஐ விசாரணை கோரும் உதயநிதி! கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சீப்பால்டிக்சா!
லைவ்லுக்
செய்தி: ம.பா. கெஜராஜ்,
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரிக்க திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஷ்டி சிங் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஜி. காமினி விசாரணையைக் கண்காணித்து வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்துறையும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
எம்.எல்.ஏ.வுக்கு போலீசார் சம்மன் வழங்கி விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். புகார் அளித்த பெண் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தின் முன்பாக ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணை முன்னேற்றம் குறித்து நவம்பர் 27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் காவல்துறை விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் சிபிஐ விசாரணை கோரும் உதயநிதி!
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவைச் சேர்ந்தவருமான உதயநிதி ஸ்டாலின், இந்த வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஏற்கெனவே டிஜிபியைச் சந்தித்து மனு அளித்த அவர், எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதன் தொடர்ச்சியாக இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மனு அளித்துள்ளார். அப்போதும் சிபிஐ விசாரணை, கைது நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இது அரசியலா? அல்லது விசாரணை மீதான நம்பிக்கையின்மையா?
ஒரு பெண் அரசு உயர் அதிகாரி அளித்த புகார் என்பதால், அதன் மீது முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் என்பதற்காக விசாரணை பாதிக்கப்படக் கூடாது என்பதும் முக்கியம்.
ஆனால், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு எஸ்.பி. தலைமையிலும், ஐ.ஜி. மேற்பார்வையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு கட்டத்திலும் சிபிஐ விசாரணை கோரிக்கையை முன்வைப்பது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மாநில காவல்துறை மீது நம்பிக்கையில்லை என்று கூறுவது சரியான அணுகுமுறையா என்ற கேள்வியும் எழுகிறது.
எதிர்க்கட்சியின் கடமை அரசின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும், தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவதும்தான். அதேபோல், விசாரணை அமைப்புகள் தங்களது பணியைச் சுதந்திரமாகவும், எந்த அரசியல் அழுத்தமும் இன்றியும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடுவதைவிட, புகார் அளித்த பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதும், குற்றச்சாட்டுகளின் உண்மை சட்டப்படி வெளிவருவதுமே முக்கியம்.
நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதே தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
