மாணவர்களுக்கு விஜய் கல்வி விருது சென்னையில் கோலாகாலம்!

மாணவர்களுக்கு விஜய் கல்வி விருது சென்னையில் கோலாகாலம்!

லைவ்லுக்
செய்தி: ம.பா. கெஜராஜ்,

அரசியல் சூழ்ச்சி அரசியல் சர்ச்சைகளுக்கு இடையே கல்வி விருது வழங்கும் விழாவை டிவிகே நடத்தி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கிக் கௌரவித்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தமிழக வெற்றிக் கழகம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான முதல் கட்ட விருது வழங்கும் விழா கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்ற விழாவில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர்.

நாளை நவம்பர் 27ஆம் தேதி சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட விழா நடைபெற உள்ளது.

விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர். மாணவர்களின் கல்விச் சாதனையை அங்கீகரித்து, அவர்களை அடுத்தகட்ட இலக்குகளை நோக்கி ஊக்கப்படுத்தும் வகையில் விருதுகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் ஊழல் நடைபெற்றால் அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் தங்களுக்கென தனித்துவத்தை வளர்த்துக்கொண்டு, தடைகளைக் கண்டு அஞ்சாமல் முன்னேற வேண்டும் என்றும், போதைப்பொருட்கள் மற்றும் தவறான பழக்கவழக்கங்களிலிருந்து விலகி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை நேரில் அழைத்து, அவர்களது பெற்றோர் முன்னிலையில் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கும் இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், அவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளுக்கான நம்பிக்கையை வளர்க்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.