அரக்கோணம் ரயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்துமிடம் எங்கே?பயணச்சீட்டு வாங்கப் போனாலும் பார்க்கிங் கட்டணமா? அடப்பாவிகளா!
செய்தி: கு. அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், அக். 10:
அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வாங்கவும், ரயிலில் பயணம் செய்யும் உறவினர்களை வழியனுப்பவும் வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களைச் சில நிமிடங்கள் நிறுத்துவதற்குக்கூட சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
வாகனங்களைச் சங்கிலியால் பூட்டி அபராதம் விதிக்கும் நடவடிக்கையால், கட்டண வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், பயணிகளின் வசதிக்காக இலவச வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சில நிமிடங்களுக்குக்கூட வாகனம் நிறுத்த முடியாதா?
அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ரயில் நிலையத்தின் இருபுறங்களிலும் ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டண இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பயணச்சீட்டு வாங்குவதற்காகச் சிறிது நேரம் வருபவர்களும், ரயிலில் பயணம் செய்யும் உறவினர்களை வழியனுப்ப வருபவர்களும் பயணச்சீட்டு அலுவலகங்களுக்கு அருகில் தங்களது வாகனங்களை நிறுத்துவது வழக்கம்.
ஆனால், அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை எனக் கூறி ரயில்வே பாதுகாப்புப் படையினர் வாகனங்களைச் சங்கிலியால் பூட்டுவதுடன், வாகன உரிமையாளர்கள் திரும்பி வந்ததும் அபராதம் விதித்து வாகனங்களை விடுவிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், உரிய அறிவிப்புப் பலகைகள் இல்லாமல் வாகனங்களைப் பூட்டி அபராதம் விதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வாகனங்களை நிறுத்த அனுமதியில்லாத பகுதிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன.
குறைந்தபட்சம் ரூ.15 செலவு!
பயணச்சீட்டு வாங்குவதற்காகவோ, உறவினர்களை வழியனுப்புவதற்காகவோ சில நிமிடங்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்கு வருபவர்களும் அருகிலுள்ள கட்டண வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு குறைந்தபட்சமாக ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பயணச்சீட்டு வாங்குவதற்கும், உறவினர்களை வழியனுப்புவதற்கும் வரும் மக்களின் வாகனங்களைச் சிறிது நேரம் நிறுத்துவதற்கான மாற்று வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
RPF கட்டண நிறுத்துமிடங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா?
வாகன நிறுத்த விதிகளை அமல்படுத்துவது அவசியமானதாக இருந்தாலும், பொதுமக்கள் சிரமமின்றிப் பயணச்சீட்டு வாங்கவும், பயணிகளை வழியனுப்பவும் ஏற்ற வசதிகள் இருப்பதும் முக்கியம்.
இலவசமாகச் சிறிது நேரம் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி இல்லாததால், பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ரயில்வே நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு, பயணச்சீட்டு வாங்கவும் பயணிகளை வழியனுப்பவும் வரும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான இலவச இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை அமைக்க வேண்டும்.
மேலும், வாகன நிறுத்த விதிகள், அபராத நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து தெளிவான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளத

admin
