ஆட்சியர் முகாமில் பெட்ரோல் ஊற்றி போராட்ட முயற்சி! பொதுமக்களுக்கு நாற்காலிகள்கூட இல்லாததால் பரபரப்பு

ஆட்சியர் முகாமில் பெட்ரோல் ஊற்றி போராட்ட முயற்சி! பொதுமக்களுக்கு நாற்காலிகள்கூட இல்லாததால் பரபரப்பு

செய்தி: ஜி. குலசேகரன்
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், தனது கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சரத்பாபு என்பவர் பெட்ரோல் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மல்லப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குட்டிகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சரத்பாபு, தனது இடத்தில் ஜி.எல்.ஆர். குடிநீர்த் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் இயக்குநர் அறை உள்ளிட்டவை அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், கிராம சபைக் கூட்டங்களில் மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி அதிருப்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் தொடர்பு முகாமில் பெட்ரோல் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவரை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பெட்ரோலை அகற்றினர்.

சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, அவரது புகார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே, முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவரும் அமர்வதற்குப் போதிய நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படாததால், சுமார் இரண்டு மணி நேரம் பலர் நின்றுகொண்டே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தபோது பொதுமக்கள் அமர முடியாத நிலை ஏற்பட்டது அங்கிருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னர், மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி. வீரமணி ஆகியோரிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

மக்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற முகாம்களில் அடிப்படை வசதிகளையும் முறையாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விளக்கம் கிடைத்தால் அது குறித்தும் வெளியிடப்படும்.