போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.1.07 கோடி மோசடி! வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது
செய்தி: ஜி. குலசேகரன்,
வேலூர்: கே.வி.குப்பம் அருகே வங்கியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.1 கோடியே 7 லட்சத்து 28 ஆயிரம் கடன் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில், வங்கி நகை மதிப்பீட்டாளர் பார்த்திபன் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்காவனூரில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் சின்னவடுகன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் கடந்த 15 ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
கீழ்முட்டுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசனும் கடந்த மூன்று ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஏற்கெனவே நகைக் கடன் பெற்றிருந்த தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து 16 நகைக் கடன்களைப் பார்த்திபன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதில் 1,080 கிராம் போலி தங்க நகைகளை அடமானமாக வைத்து மொத்தம் ரூ.1,07,28,000 கடன் பெற்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கியின் மண்டல மேலாளர் யாசின் பாஷா அளித்த புகாரின் பேரில், வேலூர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தில் சுமார் ரூ.80 லட்சத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழந்ததாகவும், ரூ.25 லட்சத்தை வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடியில் சீனிவாசனுக்கும் தொடர்பு உள்ளதா, வேறு வங்கிகளிலும் இதேபோன்ற முறையில் மோசடி நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கியின் உள் கண்காணிப்பு நடைமுறைகள் மற்றும் நகைக் கடன் மதிப்பீட்டில் பின்பற்றப்பட்ட சரிபார்ப்பு முறைகள் குறித்தும் விசாரணை நடைபெறுவது அவசியமாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் விளக்கம் கிடைத்தால் அது குறித்தும் வெளியிடப்படும்.

admin
