100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பா? குடியாத்தம் குறைதீர்வுக் கூட்டத்தில் இருதரப்பினர் கடும் வாக்குவாதம்!

100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பா? குடியாத்தம் குறைதீர்வுக் கூட்டத்தில் இருதரப்பினர் கடும் வாக்குவாதம்!

செய்தி: கு. அசோக்,.

வேலூர்: குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில், 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக விவசாய சங்கத்தினருக்கும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விவசாய சங்கத்தினர், 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். இதற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் வடிவேலு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினார்.

தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தை விவசாய நிலங்களில் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அப்போது பேசிய விவசாயி ஒருவர், விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியைச் சுட்டிக்காட்டினார். ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், விவசாயிகள் கேட்காமலேயே கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, 100 நாள் வேலைத் திட்டத்தை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான விவாதம், குறைதீர்வுக் கூட்டத்திலேயே இருதரப்பு வாக்குவாதமாக மாறியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.