மூடிக்கிடக்கும் அண்ணா கலையரங்கம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா? வாடகை உயர்வை குறைக்கவும் ஆட்சியரிடம் வணிகர் சங்கம் மனு!
செய்தி: கு.அசோக்,
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸிடம் மனு அளிக்கப்பட்டது.
வேலூர் மண்டலத் தலைவர் ஞானவேலு தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், வேலூர் நகரின் மையப்பகுதியில் தமிழக அரசுக்குச் சொந்தமான அண்ணா கலையரங்கம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு பயன்பாடின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டிடத்தை அரசு புதுப்பித்து, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழியக்கங்கள் சார்பில் பொதுநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காட்பாடியில் கூட்டுறவுத்துறைக்குச் சொந்தமான கடைகளுக்கான மாத வாடகை தற்போது வசூலிக்கப்படும் தொகையைவிட 400 சதவீதம் முதல் 700 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வணிகர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இவ்வளவு அதிக அளவில் வாடகை உயர்த்தப்பட்டிருப்பது அவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ள வணிகர் சங்கத்தினர், வாடகையை அதிகபட்சம் 5 சதவீதம் மட்டுமே உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

admin
