கலெக்டர் கார் ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கார் இல்லாததால் திரும்பிய வழக்கறிஞர்கள் – அடுத்த முறை விடமாட்டோம் என எச்சரிக்கை!
செய்தி: ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மணியார்குப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் 1 சென்ட் நிலம் கடந்த 1986-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு, ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக வீட்டுமனைகளாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான இழப்பீடாக ரூ.4 கோடியே 66 லட்சம் வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை ரூ.1 கோடியே 61 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையைப் பெறுவதற்காக நில உரிமையாளர் நடராஜன் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிக்குமார் ஆஜராகி வாதாடி வந்த நிலையில், வழக்கை விசாரித்த திருப்பத்தூர் சார்பு நீதிமன்றம், நில உரிமையாளருக்கு வழங்க வேண்டிய தொகையை வசூலிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் கார் உள்ளிட்ட அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்யலாம் என உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கறிஞர் ரவிக்குமார் தலைமையிலான வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், வழக்கறிஞர்கள் வருவதை அறிந்து மாவட்ட ஆட்சியரின் கார் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ரவிக்குமார், “நாங்கள் வருவதை அறிந்து மாவட்ட ஆட்சியர் காரை எடுத்துச் சென்றுள்ளார். அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக ஜப்தி செய்வோம்” என தெரிவித்தார்.
மேலும், நடராஜன் குடும்பத்தினருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

admin
