செய்தியாளர்களை ஒருதலைப்பட்சமாக நடத்தும் தொல்லியல் துறை பெண் அதிகாரி? தேவாலயத்தில் இறந்தவர் உடலை வைத்து பிரார்த்தனை செய்ய எதிர்ப்பு!
செய்தி:ஜி.குணசேகரன்,
வேலூர் கோட்டையில் பிணத்தை வைத்து பிரார்த்தனை செய்வதாக புகார் – மத மோதல் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வேலூர் கோட்டைக்குள் உள்ள தேவாலயத்தில் இறந்தவர்களின் உடலை வைத்து பிரார்த்தனை செய்வது தொடர்பாக எழுந்துள்ள புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து முன்னணி நிர்வாகிகள் வேலூர் கோட்டையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
வேலூர் கோட்டைக்குள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம் உள்ளது.
இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஒருவரின் உடலை தேவாலயத்திற்குள் வைத்து பிரார்த்தனை நடைபெற்றதாகவும், அதேபோல் ஞாயிற்றுக்கிழமையும் இறந்தவரின் உடலை வைத்து பிரார்த்தனை நடைபெற்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைமுறையில் இல்லாத வகையில் இறந்தவர்களின் உடலை கோட்டைக்குள் கொண்டு வந்து பிரார்த்தனை செய்வது, எதிர்காலத்தில் மத உணர்வுகள் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உரிய விதிமுறைகள் உள்ளதா என்பதை தொல்லியல் துறை தெளிவுபடுத்த வேண்டும் என மனு அளித்தவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் மத மோதல்கள் உருவாகும் சூழல் ஏற்படலாம் என்பதால், கோட்டை வளாகத்தில் அனைத்து தரப்பினரும் அமைதியாக வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் உரிய நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மகேஷ், நிர்வாகி பாஸ்கர், பாஜக சார்பில் பாபு இளங்கோ மற்றும் பொதுமக்கள் சார்பில் அப்பு பால் பாலாஜி,சுரேஷ், பாஸ்கர் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் தொல்லியல் துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது தொல்லியல் துறை வேலூர் பொறுப்பு அதிகாரி அகல்யாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிகாரியிடம் புகார் தொடர்பாக விளக்கம் கேட்க செய்தியாளர்கள் முயன்றபோது, அவர் செய்தியாளர்களை சந்திக்க மறுத்ததுடன், தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி வாரத்தில் சில நாட்கள் மட்டுமே பணிக்கு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது புகார்களை நேரடியாக தெரிவிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பொதுமக்களின் புகார்களுக்கு பதிலளிப்பதும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிப்பதும் ஒரு அரசு அதிகாரியின் கடமை.
எனவே, தொல்லியல் துறையின் உயர் அதிகாரிகள் இந்தப் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து கிறிஸ்தவ மதத் தரப்பினரிடம் விளக்கம் பெரும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்டோரை அலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை
அவர்களது விளக்கம் கிடைத்தால், அது பரிசீலிக்கப்பட்டு வெளியிடப்படும்.
மேலும் இறந்தவர் உடல் என்பது தீட்டு ஆகும். தீட்டான எதையும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டு செல்லக்கூடாது என்பது நடைமுறை.
இதுகுறித்து சந்தர்ப்பம் வரும்பொழுது விவிலியத்தின் ஆதாரத்துடன் செய்தி வெளியிடப்படும்.
குறிப்பு: மேற்கண்ட அதிகாரி நிருபர்களிடம் காட்டிய கடுமையை கோட்டையை சுற்றி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது செலுத்தினால் ரொம்ப நலம்.

admin
