அங்கன்வாடி கூடத்தில் டாஸ்மாக் பார்... அட பாவிங்களா!
செய்தி: ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அறுப்பு மேடு பகுதியில், பிஞ்சுக் குழந்தைகளை தாலாட்டி, சீராட்டி வளர்க்க வேண்டிய அங்கன்வாடி மையம், மதுபிரியர்களின் மது அருந்தும் இடமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுப்பு மேடு பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் கழிஞ்சூர் ஏரி சீரமைக்கப்பட்டது. அங்கு படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
ஏரி சீரமைப்பின்போது எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லோடு மண், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையது என கூறப்படுகிறது.
அப்போதைய அமைச்சர் அந்த மண்ணை அள்ளி, தங்களது கல்லூரி வளாகங்களுக்கு கொண்டு சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்பொழுது அந்தப் படகு இல்லம் பயனற்று பரிதாபமாக காட்சியளிக்கிறது.
இந்த ஏரியின் பின்புறம் அறுப்பு மேடு பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
பிஞ்சுக் குழந்தைகள் வந்து செல்லும் அந்த அங்கன்வாடி மையத்திற்கு வெளியிலேயே “இங்கு மது அருந்தக்கூடாது” என எச்சரிக்கை அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது.
ஆனால், அந்த எச்சரிக்கையையே பொருட்படுத்தாமல் சிலர் அங்கன்வாடி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி வருகிறார்கள்.
அங்கன்வாடிக்கு அருகிலேயே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடை தான் இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் சிலர், அருகிலுள்ள சாலையோரங்கள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் தற்போது அங்கன்வாடி மையத்தையும் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர்.
மது அருந்திவிட்டு அங்கேயே வாந்தி எடுப்பது, மதுபாட்டில்களை வீசிச் செல்வது, அசுத்தம் செய்வது போன்ற செயல்கள் அன்றாடும் அரங்கேறுகிறது.
இதை மறுநாள் காலையில் பணிக்கு வரும் அங்கன்வாடி ஊழியர்கள் ,குழந்தைகள் வருவதற்கு முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்படுகின்றன.
குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட அங்கன்வாடி மையம்... மதுபிரியர்களின் பாராக மாறுவதா?
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிஞ்சுக் குழந்தைகள் வந்து செல்லும் இடத்திலேயே மதுபிரியர்கள் அட்டகாசம் செய்வதும், அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறுவது நடைமுறையில் எளிதான காரியம் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆகவே குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கோ அல்லது அங்கன்வாடி சுற்றுப்புறத்தில் மது அருந்துவதை முற்றிலும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கோ அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் அறுப்பு மேடு அங்கன்வாடி மையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியை மேற்கொண்டு, அங்கு மது அருந்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிஞ்சுக் குழந்தைகள் படிக்கும் இடம்... டாஸ்மாக் பாராக மாறுவதை இனியும் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது!
குழந்தைகளின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறைகளும் உடனடியாக நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
