மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கும் மோடி திட்டம்!
செய்தி: ம.பா. கெஜராஜ்
புதுடெல்லி:
மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் அக்டோபர் 25-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் நீண்ட காலமாக பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றம் நடைபெறாத நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட உள்ள மாற்றம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், அந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது சில அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் கூடுதல் பொறுப்பாக உள்ள நிலையில், அமைச்சரவை மாற்றத்தின்போது அந்த பொறுப்புகள் பிரித்து வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மத்திய அமைச்சரவையில் தற்போது முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாத நிலையில், புதிய மாற்றத்தில் அந்த சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக நவராத்திரி காலத்தில் சிறப்புக் கூட்டம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவை மாற்றமும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடர்பான திட்டமும் ஒரே நேரத்தில் வெளியாகியிருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
