நீதிமன்றத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு மீண்டும் வேலை? உதயேந்திரம் பேரூராட்சி விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
செய்தி: ஜி. குணசேகரன்,
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம், உதயேந்திரம் பேரூராட்சியில் பணியாற்றும் ரவிச்சந்திரன் என்பவர் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பாகப் புகார் இருந்து வந்தது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாநில கௌரவத் தலைவர் ராஜவேலு, நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகும் அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜவேலு கூறியதாவது:
உதயேந்திரம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காவலராகப் பணியாற்றும் ரவிச்சந்திரன், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணிபுரிவதாகவும், அம்பலூர் குடிநீர்த் தொட்டியில் இரவுக் காவலராக நியமிக்கப்பட்டிருந்தும் அங்கு செல்வதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பேரூராட்சி அலுவலகத்திலேயே அமர்ந்துகொண்டு வரி வசூல் பணிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பத்துக்கும் மேற்பட்டோரிடம் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதாகக் கூறி தலா ரூ.25,000 பெற்றும் இதுவரை இணைப்புகளை வழங்கவில்லை.

குடிநீர்க் குழாய் இணைப்புகள் தொடர்பாகப் போலி ரசீதுகள் தயாரித்து வசூல் செய்வதாகவும் ராஜவேலு புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல் வார்டு கவுன்சிலர் கூட்டத்தில் எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ரவிச்சந்திரனின் பணிநியமனம் முறையற்றது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அது உறுதி செய்யப்பட்டு அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் ராஜவேலு தெரிவித்தார்.
இருப்பினும், சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலராக இருந்த ராஜலட்சுமி மீண்டும் அவருக்குப் பணி வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
நீதிமன்ற நடவடிக்கைக்குப் பிறகு மீண்டும் பணி வழங்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் .

மேலும் குடிநீர்க் குழாய் இணைப்பு மற்றும் ரசீது தொடர்பான புகார்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜவேலு கோரிக்கை விடுத்தார்.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தின் விளக்கமும் பெறப்பட்டு வெளியிடப்படும்.

admin
