இனி டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் பஸ்களிலும் இலவச பயணம்!எவ்வளவு தூரம் பயணிக்கலாம் விவரம்!

இனி டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் பஸ்களிலும் இலவச பயணம்!எவ்வளவு தூரம் பயணிக்கலாம் விவரம்!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

தமிழகத்தில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே நடைமுறையில் இருந்து வந்த இலவசப் பயண வசதி, தற்போது எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மகளிர் விடியல் பயணத் திட்டம், தற்போது வெற்றிப் பயணத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தூரம் இலவசமாகப் பயணிக்கலாம்?

புதிய திட்டத்தின்படி, குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம்.

பொதுவாக, எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 30 முதல் 100 கி.மீ. வரையிலும், எல்.எஸ்.எஸ். பேருந்துகள் 30 முதல் 40 கி.மீ. வரையிலும், டீலக்ஸ் பேருந்துகள் 30 முதல் 50 கி.மீ. வரையிலும் இயக்கப்படுகின்றன.

இதனால், சென்னையிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகளை மாற்றிப் பயணம் செய்து, நீண்ட தூரம் வரை இலவசமாகச் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இருப்பினும், பயணிக்கும் வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்ட பேருந்துகளின் சேவை மற்றும் நிறுத்தங்களைப் பொறுத்தே பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

12,692 பேருந்துகளில் இலவசப் பயணம்!

தமிழகம் முழுவதும் 12,692 எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாகப் பயணிக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாள்தோறும் சுமார் 84 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்றும், 16 லட்சத்திற்கும் அதிகமான ஒருவழிப் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறை விதிகளுக்கு ஏற்ப பெண்கள் தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம்.