ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு புகார்! திமுக பகுதி செயலாளர் ராம்குமார் கைது!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமாரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்ஜாமீன் மனு விசாரணைக்காக மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகரைச் சேர்ந்த ராம்குமார், திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்ததாகக் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், திருச்சி மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ராம்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோயில் சொத்து தங்களுக்குச் சொந்தமானது எனக் காட்டுவதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ரூ.2.90 கோடி பணம் பெற்றுக்கொண்டு பத்திரப் பதிவு செய்யப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராம்குமார், சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சிலர் மற்றும் ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்க்க ராம்குமார் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு விசாரணைக்காக அவர் மதுரைக்குச் சென்றபோது, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே அவரது கார் மற்றும் காலணிகள் கிடந்ததாகவும், அவரைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் அவரது மனைவி ஆண்டாள் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான தனிப்படையினர் ராம்குமாரைக் கைது செய்திருப்பதை உறுதிப்படுத்தினர்.
கோயில் சொத்துகளைப் பாதுகாப்பது தொடர்பாகப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு புகாரில் அரசியல் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது திருச்சி அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவை. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டப்படி நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள்.

admin
