கடந்த ஆட்சியில் திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே இருந்தன! இப்போது செயல்படுத்துகிறோம்: அமைச்சர் விஜய் பாலாஜி வேலூரில் ரூ.4.77 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
செய்தி: ஜி. குலசேகரன்,
வேலூர், அக். 17.
கடந்த ஆட்சியில் திட்டங்கள் காகித வடிவில் மட்டுமே இருந்ததாகவும், தற்போது அவற்றை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தி வருவதாகவும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் காயிதே மில்லத் அரங்கில், மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் ரூ.4.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலழகன், வினோத் கண்ணா, சுதாகர், சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாJவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சர் விஜய் பாலாஜி, மாற்றுத்திறனாளிகளுக்குச் செவித்திறன் கருவிகள், பிரெய்லி கருவிகள், மகளிருக்கு கடனுதவி, தையல் இயந்திரங்கள், வீட்டு மனைப் பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நம்பிக்கை வைத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டு, மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் திட்டங்கள் காகித வடிவில் மட்டுமே இருந்ததாகவும், தற்போது அவற்றை மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களாகச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்களுடன் அமைச்சர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

admin
