சர்ச்சைக்குரிய வேலூர் ஆவினில்15 நாட்களாக உற்பத்தி முடக்கம்! பால் முதல் ஐஸ்கிரீம் வரை தட்டுப்பாடு – பொதுமக்கள் அவதி!
செய்தி: கு.அசோக்,
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பால் பொருட்கள் உற்பத்தி கடந்த 15 நாட்களாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆவின் முகவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் மையத்திலிருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குப் பால் மற்றும் பால் பொருட்கள் தினசரி அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆவின் மோர், தயிர், லஸ்ஸி, கப் ஐஸ்கிரீம், கிரீம், ரோஸ்மில்க், நெய் உள்ளிட்ட பொருட்கள் கடந்த 15 நாட்களாகக் கிடைக்கவில்லை என முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், முகவர்கள் 100 சதவீதம் பால் பாக்கெட்டுகளைக் கோரினாலும், 55 முதல் 60 சதவீதம் வரையிலான அளவிலேயே பால் பாக்கெட்டுகள் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அளவு பாலை வழங்க முடியாமல் முகவர்களும் விற்பனையாளர்களும் சிரமப்படுகின்றனர்.
சில இடங்களில் பால் கேட்டு வரும் பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைக் காலங்களும் நெருங்குகின்றன.

இத்தகைய சூழலில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், தட்டுப்பாடு நீடித்தால் பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என முகவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வேலூர் ஆவின் நிறுவனத்தை பொருத்தவரை அதன் மீது கடந்த பல்வேறு தில்லாலங்கடி குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.லோடு கணக்கில் பால் அன்னை மாவட்டங்களுக்கு கடத்தப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன.
என் நிலையில் தற்போது உற்பத்தி குறைபாடுகளும் சேர்ந்துள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக சீர்படுத்தினால் நலம்.
அதேபோல் சில ரவுடிகளின் கைங்கரியமும் இதில் இருப்பதாக கூறப்படுவதையும் களைய வேண்டும்.
இது குறித்தெல்லாம் ஆவின் நிர்வாகம் விளக்கம் அளிக்க முன் வந்தால் அவை பரிசீலித்து வெளியிடப்படும்.

admin
