கொலைவெறிபிடித்த மனைவிகள்! கணவர்களே உஷார்!!

கொலைவெறிபிடித்த மனைவிகள்! கணவர்களே உஷார்!!

ம.பா.கெஜராஜ்,

  மகனை தன்னுடன் அனுப்ப மறுத்த கணவரை தாக்குவதற்காக கூலிப்படையை ஏவிய மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   சென்னை தாம்பரம் அருகே, பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (42) மற்றும் அவரது மனைவி வசந்தா (40) ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

     இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் வசந்தா வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகன் தந்தையுடனேயே வசித்து வந்துள்ளார்.

   மகனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வசந்தா பலமுறை கேட்டும், தாமோதரன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, "உங்களுக்கு பார்சல் வந்துள்ளது, வீட்டின் முகவரியை கூறுங்கள்" என்று மர்ம நபர் ஒருவர் தாமோதரனை செல்போனில் தொடர்பு கொண்டார்.

   அதை நம்பி வீட்டின் வெளியே வந்த தாமோதரனை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கீழே தள்ளி, இரும்பு பேஸ்பால் மட்டையால் அவரது வலது காலில் சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. தாக்குதலுக்குப் பிறகு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

   பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பரத் (19), அகஸ்டின் (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பொன்மணி (32) என்பவர் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது.

   தொடர்ந்து விசாரித்ததில், "உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, காலை மட்டும் உடையுங்கள்" என்று கூறி, ரூ.4 லட்சம் பேரம் பேசி, ரூ.3.5 லட்சத்தை முன்பணமாக வழங்கியவர் தாமோதரனின் மனைவி வசந்தாதான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

   இதையடுத்து வசந்தா மற்றும் பொன்மணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

 சேலை வாங்கித் தராததால் கணவனை பிரஷர் குக்கர் மூடியால் தாக்கி கொலை செய்த மனைவி

  பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதாதேவி ஹரேராம் சிங் (30) மற்றும் அவரது கணவர் ஹரேராம் கிஷுன்ஜி சிங் (35) ஆகியோர் பத்லாபூரில் வசித்து வந்தனர்.

 கடந்த ஜூலை 19 அன்று, மனைவிக்காக சேலை வாங்கி வராததைத் தொடர்ந்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுனிதாதேவி, பிரஷர் குக்கரின் மூடியால் கணவரை பலமுறை தாக்கியதுடன், பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 சம்பவத்திற்குப் பிறகு, கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி மனைவி போலீசாரை தவறாக வழிநடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. அவரது தகவலின் அடிப்படையில் முதலில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்கை பதிவு செய்தனர்.

 ஆனால் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறு பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம் என்பது உறுதியானது. இதையடுத்து, உறவினர்கள் மற்றும் வீட்டு உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவி மீது சந்தேகம் வலுத்தது.

 இதையடுத்து சுனிதாதேவியை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜூலை 29 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.